Thursday, November 19, 2009

உலக மார்க்கெட்டில் சர்தார்ஜி


இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!

No comments: